சந்திப்பு மீனாட்சிபுரத்தில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்த காட்சி. அருகில் கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன்.
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு
- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
- நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தப்பகுதி களுக்கு செல்லக்கூடிய குடிநீர், தற்போது சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் குடிக்க முடியாத நிலைக்கு மாறி வருவதாக புகார் எழுந்து வருகிறது.
மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நேற்று தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதியான மீனாட்சி புரம், சிந்துபூந்துறை, குறுக்குத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து நெல்லை மாந கராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-
நெல்லை மாநகரப் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக நீண்டகாலமாக புகார்கள் உள்ளது. இதை தடுக்க ரூ.295 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதில் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
ஒரு குழுவை அமைத்து மாநகராட்சி பகுதியில் தாமிர பரணி ஆற்றின் நதிக்கரைகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்க உள்ளோம். மேலும் அந்தந்த பகுதியில் கழிவுநீர் ஓடைகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காத வண்ணம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். மேலும் அவர்கள் வீட்டிற்கு அருகே பாதாள சாக்கடை திட்டம் இருந்தால் பாதாள சாக்கடை திட்டத்தில் உடனடியாக அந்த இணைப்புகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மீண்டும் அதேபோல் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாங்களே அவர்கள் வீட்டிற்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஆய்வின்போது, முன்னாள் மண்டல சேர்மனும், 3-வது வார்டு கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் எஸ்.வி.சுரேஷ், கண்ணன், செல்வம், சிவா, போஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.