உருமாண்டம்பாளையம் பண்ணாரி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை விழா
- பக்தர்கள் அனைவரும் ஹோம குண்டத்துக்கான மூலிகைகளை காணிக்கையாக செலுத்தினர்.
- அம்மன் விக்ரகம் மற்றும் பண்ணாரி மாரியம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது.
கவுண்டம்பாளையம்,
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த உருமாண்டம்பாளையத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு உற்சவ விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது ஐம்பொன் சிலையில் உருவான பண்ணாரி மாரியம்மன் சிலையை கோவிலின் மூலஸ்தானத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 54 மூலிகைகள் மூலம் ஹோமம் வளர்க்கப்பட்டது. இதற்காக பக்தர்கள் அனைவரும் ஹோம குண்டத்துக்கான மூலிகைகளை காணிக்கையாக செலுத்தினர்.
அதன்பிறகு பூர்ணகுதி நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மன் விக்ரகத்திற்கு கண் திறப்பு, கண்ணாடியில் முகம் பார்க்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. அப்போது பெண் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பண்ணாரி அம்மன் கோவிலில் அம்மன் விக்ரத்திற்கு பஞ்சமிர்தம், நெய், தேன், பால், தயிர், திருமஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், திருநீர், பூக்கள் சகிதம் அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றன.
இதற்காக சத்தியமங்கலம் பண்ணாரியக்கன் கோவில், வனபத்திரகாளியம்மன் கோவில், காரமடை ரங்கநாதர் கோவில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை முருகன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வெள்ளக்கிணர் பெரியநாயகி அம்மன் கோவில், முத்தூர் செல்வகுமார் கோவில், காசி –ராமேஸ்வரம் கோவில், பொன்னர்-சங்கர் ஆலயம் உள்ளிட்ட கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டது.
அவற்றின் மூலம் மாப்பிள்ளை விநாயகர், வில்வமரம், வேல், அம்மன் விக்ரகம் மற்றும் பண்ணாரி மாரியம்மனுக்கு தீர்த்தங்கள் ஊற்றப்பட்டன. அதன்பிறகு அம்மன் விக்ரகம் மற்றும் பண்ணாரி மாரியம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது.
முன்னதாக கோவிலில் அரங்கேறிய வாய்கட்டு சுற்று பூஜையின் போது கலசம், சாட்டை, கத்தி, பழ வகைகள், பூக்கள், கண்ணாடி, திருநீறு வைக்கப்பட்டு பூசாரிகள் சன்னிதானத்தை சுற்றி வலம் வந்தனர். அதன்பிறகு உற்சவர் சுற்று பூஜை நடைபெற்றது.