உள்ளூர் செய்திகள்

பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளை முயற்சி

Published On 2023-01-23 12:50 IST   |   Update On 2023-01-23 12:50:00 IST
  • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.
  • கடந்த வாரம் பரமத்தி ஆசிரியர் காலனியில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி இருந்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் பரமத்தி ஆசிரியர் காலனியில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி இருந்தனர்.

அதேபோல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வெளியூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் கதவை உடைத்து கைவரிசை காட்டியதும் தெரிய வந்துள்ளது.

இந்த 2 வீடுகளிலும் பணமோ, மதிப்புமிக்க பொருட்களோ கொள்ளை போகாததால் சம்மந்தப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை. எனினும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பரமத்தியில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி எழுந்து கூச்சலிட்டார். இதையடுத்து அவரை கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்கள் பரமத்தியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பரமத்தி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. 

Tags:    

Similar News