உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை தலைமையில் கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பா.ஜனதா குழு சந்திப்பு

Published On 2023-05-21 05:29 GMT   |   Update On 2023-05-21 08:59 GMT
  • விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடந்த உயிரிழப்புகள், மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க இந்த அரசு தவறி விட்டதையே காட்டுகிறது.
  • மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் முதன்மைப் பொறுப்பு மாநிலத்தில் கள்ளச்சாராயத்தை தடுப்பதாகும்.

சென்னை:

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம், செங்கல்பட்டு அருகே உள்ள சித்தாமூர் ஆகிய 2 இடங்களிலும் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அ.தி.மு.க., பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. அரசின் அலட்சிய போக்கு காரணமாகவே கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று இந்த 2 கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதன்படி பாரதிய ஜனதா கட்சியினர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தமிழக சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி, முன்னாள் எம.எல்.ஏ. காயத்ரிதேவி, மாநில செயலாளர் பிரமிளா சம்பத் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கவர்னரிடம் மனு அளித்தனர்.

அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய மரண விவகாரத்தில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தனித்தனியாக 2 மனுக்களை அண்ணாமலை கவர்னரிடம் வழங்கினார்.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறி இருப்பதாவது:-

கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது மற்றும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளரிடம் விரிவான அறிக்கை கேட்டிருப்பதற்கு தமிழக பா.ஜனதா சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடந்த உயிரிழப்புகள், மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க இந்த அரசு தவறி விட்டதையே காட்டுகிறது.

மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் முதன்மைப் பொறுப்பு மாநிலத்தில் கள்ளச்சாராயத்தை தடுப்பதாகும். இந்த விஷயத்தில் நீங்கள் (கவர்னர்) தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News