அரியலூரில் விதவை பெண் வெட்டி கொலை
- விதவை பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார்
- கொலை செய்தது யார்? எத்தனைபேர் சேர்ந்து கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலுார்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி(வயது40). இவர் அதே கிராமத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர் சில மாதங்களில் இறந்து விட்டார். இதனையடுத்து 2வதாக திருமணம் செய்த ராமகிருஷ்ணனும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் குடும்பத்தின் மீது ராசாத்தி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தாக்கல் செய்த நிலையில் ரூ.11 லட்சம் ஜீவனாம்சம் தர நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராமகிருஷ்ணன் குடும்பத்தினரிடமிருந்து ராசாத்தி ஜீவனாம்சமாக ரூ.11 லட்சத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ராசாத்தி ஜீவனாம்சம் வழக்கு தொடர அவரின் முதல் கணவர் முனியப்பனின் தம்பி மனைவி உதவியாக இருந்ததாகவும், அந்த வகையில் அவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவாகி உள்ளது எனக்கூறி அவர் அந்த பணத்தை ராசாத்தியிடம் கேட்டுள்ளார். பணம் தர ராசாத்தி மறுத்தநிலையில், இது சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை ராசாத்தி கோவில்எசனை- வெங்கனூர் சாலையில் வெங்கனூர் சுடுகாடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வெங்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராசாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலைக்கான காரணம் என்ன? ராசாத்தியை கொலை செய்தது யார்? எத்தனைபேர் சேர்ந்து கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.