தலைவராக அண்ணாமலை தான் தொடர வேண்டும்: பா.ஜ.க.வினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
- அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
- சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜனதா இடையே மீண்டும் கூட்டணி ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது கூட்டணி அமைவதற்கான சூழலை உறுதிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவார் என்றும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பேச்சு அடிப்படுகிறது.
இதனால் அண்ணாமலையே மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவராக தொடர வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. கட்சியினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், இந்தியாவுக்கு நரேந்திரமோடி, தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை என அதில் அச்சிடப்பட்டு உள்ளது.
அந்த போஸ்டரில் வேண்டும், வேண்டும் அண்ணாமலை வேண்டும். வேண்டாம், வேண்டாம் அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிக்க வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.