உள்ளூர் செய்திகள்

கோவையில் நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கும்பல்

Published On 2023-03-23 09:50 GMT   |   Update On 2023-03-23 09:50 GMT
  • 2 கடைகளிலுமே கம்பி மூலம் துளை போடப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.
  • பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.‌

வடவள்ளி,

கோவை சிறுவாணி சாலையில் பூலுவபட்டி பேரூராட்சிக்குட்பட்ட கட்டிடம் உள்ளது.

இந்த கட்டிடத்தில் டீக்கடை, மெடிக்கல் ஸ்டோர், நகைக்கடை உள்பட 10க்கும் அதிகமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

நேற்று இரவு வழக்கம் போல இந்த கடைகளை அதன் உரிமையாளர்கள் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இன்று காலை கடையை திறப்பதற்காக அனைவரும் வந்தனர்.

அப்போது டீக்கடையின் பூட்டும், மெடிக்கல் ஸ்டோர்சின் பூட்டும் உடைந்து திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 2 கடைகளிலுமே கம்பி மூலம் துளை போடப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.

உடனடியாக சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது 2 கடைகளையும்யொட்டி நகைக்கடை இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் இந்த கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் நேராக நகைக்கடையின் பின்னால் சென்று துளை போட்டு உள்ளே நுழைய முயன்றுள்ளனர். ஆனால் அதுமுடியாமல் போகவே, மருந்துக்கடையையும், டீக்கடையையும் உடைத்து அங்கு துளை போட முயன்றுள்ளனர்.

அந்த சமயத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால், பயந்து போய் அந்த கும்பல் அப்படியே விட்டு ஓடிசென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். மேலும் பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

போலீசார் ரோந்து வந்ததால் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பியது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News