உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே கோவில் விழாவிற்கு பேனர் வைத்த தகராறு; தொழிலாளி மீது தாக்குதல் 4 பேருக்கு வலைவீச்சு

Published On 2022-09-11 09:06 GMT   |   Update On 2022-09-11 09:06 GMT
  • களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் முத்தாரம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
  • இதையொட்டி ஊர் பெரியவர்கள் படத்துடன் பேனர் வைத்திருந்தனர்

களக்காடு:

களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் முத்தாரம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ஊர் பெரியவர்கள் படத்துடன் பேனர் வைத்திருந்தனர். இந்த பேனரை அதே ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் பிளேடால் கிழித்து சேதப்படுத்தினார்.

இதையடுத்து ஊர் பெரியர்கள் சஞ்சய்யிடம் இதுபற்றி தட்டிக் கேட்டனர். அப்போது சஞ்சய்க்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த தங்கத்துரை மகன் முத்துக்குமார் பேசினார். அப்போது அவருக்கும், லெட்சுமணன் மகன் தொழிலாளி பிரவின்ராஜாவுக்கும் (வயது29) தகராறு ஏற்பட்டது. பின்னர் பெரியவர்கள் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தன்று பிரவின்ராஜாவின் தந்தை லெட்சுமணன் நடுச்சாலைப்புதூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை முத்துக்குமார், அவரது சகோதரர்கள் கணேசன், முத்துராஜ் மற்றும் ஆனந்தன் ஆகிய 4 பேரும் அவதூறாக பேசினர்.

இதைப்பார்த்த பிரவின் ராஜா எனது தந்தையிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து, பிரவின்ராஜாவை அவதூறாக பேசி, கம்பு, இரும்பு கம்பி, அரிவாள்களால் சரமாரியாக தாக்கினர்.

மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த பிரவின்ராஜா களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி 4 பேரையும் தேடி வருகின்றார்.

Tags:    

Similar News