கடைக்கு செல்வதாக கூறி விட்டு காதலனுடன் சென்ற 11-ம் வகுப்பு மாணவி
- வாலிபருக்கும், சிறுமிக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.
- சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். இவர் கிணத்துக்கடவில் உள்ள ஓர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஒரே பகுதி என்பதால் இவருக்கும், சிறுமிக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் 4 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் வாலிபர், சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதனை சிறுமி வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுமி செல்போனை சார்ஜர் போட்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தாய், செல்போனை பார்த்ததும் அதிர்ச்சியானார்.
இது யாருடையது, யார் வாங்கி தந்தது என கேட்கவே சிறுமி அனைத்தையும் தெரிவித்து விட்டார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலேயே வைத்து விட்டனர். நேற்று வீட்டில் இருந்த சிறுமி மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடினர்.
இந்த நிலையில் வாலிபர் சிறுமியின் வீட்டிற்கு போன் செய்து, சிறுமி என்னுடன் தான் இருக்கிறார். நான் அவரை உங்கள் வீட்டில் கொண்டு வந்து விடுகிறேன் என தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.