உள்ளூர் செய்திகள்

கணவர், குழந்தையை பிரிந்து வாழ்ந்த அழகு கலை பெண் திடீர் தற்கொலை

Published On 2023-09-05 14:30 IST   |   Update On 2023-09-05 14:30:00 IST
  • மகனை பார்க்க முடியாததால் தூக்கு போட்டு சாவு
  • திருமணமான 5 வருடத்தில் பிரீத்தி தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது

கோவை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி பிரீத்தி (வயது 24). அழகு கலை நிபுணர். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 4 வயதில் ஒருமகன் உள்ளார்.

விக்னேஷ் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். கடந்த வருடத்துக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் அவர்கள் தனித்தனியாக வசித்து வந்தனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரீத்தி பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சந்தைமேடு பகுதியில் குடியேறினார். இந்தநிலையில் இவரது கணவர் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றார். இவர்களது மகன் விக்னேஷின் தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.

மகனை பார்க்க முடியாததால் பிரீத்தி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட பிரீத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 5 வருடத்தில் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News