உள்ளூர் செய்திகள்
தார்கலவை ஆலை இயங்க எதிர்ப்பு: கூடலூர் போக்கர் காலனி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
கூடலூரில் கிராமமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவாலா. இங்குள்ள போக்கர் காலனியில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தார்கலவை ஆலை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த ஆலையில் இருந்து வெளியாகும் புகை மற்றும் தூசு காரணமாக அருகே உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.இந்த ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2020&ம் ஆண்டு நவம்பவர் மாதத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலையில் இயக்கத்தை தடை செய்ததுடன், ஆலைக்கும் சீல் வைத்தனர்.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் இந்த ஆலையை இயக்கி கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் பரவியதும், மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த ஆலையை திறக்க கூடாது என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆலையை மீண்டும் திறப்பதால் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் வசிக்க கூடியவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்த ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளில் மக்கள் கருப்பு கொடியும் ஏற்றியுள்ளனர். ஆலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தற்போது நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.