உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நீலகிரியில் 294 கவுன்சிலர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது

Published On 2022-01-28 16:32 IST   |   Update On 2022-01-28 16:32:00 IST
நீலகிரியில் 294 பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
ஊட்டி:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று முதல் வேட்பு மனுதாக்கல் செய்ய 15 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ஊர்வலமாக வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. நகராட்சிகளில் 108 இடங்கள், பேரூராட்சிகளில் 186 இடங்கள் என மொத்தம் 294 பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. 

நீலகிரியில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சி அலுவலகங்கள், அதிகரட்டி, பிக்கட்டி, தேவர்சோலை , உலிக்கல், ஜெகதளா, கேத்தி, கீழ்குந்தா, கோத்தகிரி, நடுவட்டம், ஓவேலி, சோலூர் ஆகிய 11பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு பெறப்படுகிறது. 

ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. 9 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என 4 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 

இதையொட்டி நகராட்சி,பேரூராட்சி அலுவல கங்களில் முன்னேற் பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: & நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து, கிருமி நாசினி  கொண்டு கைகளை சுத்தப்படுத்தி, கையுறை அணிந்து வேட்பு மனுதாக்கல் செய்ய வரவேண்டும்.  2 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். 

வேட்பு மனுதாக்கலின்போது சம்பந்தப்பட்டவர் மட்டும் அலுவலகத்திற்குள் சென்று தாக்கல் செய்யலாம். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவருக்கு பதிலாக முன்மொழிபவர் தாக்கல் செய்யலாம். 

நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தடுப்புகள் வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய ஊர்வலமாகவோ அல்லது பேரணியாகவோ வரக்கூடாது. வேட்புமனு பெறும் அலுவலகங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தி பதிவு செய்யப்படும். வேட்புமனு பரிசீலனை, திரும்ப பெறுவது, சின்னங்கள் ஒதுக்கீடு போன்றவை கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

Similar News