உள்ளூர் செய்திகள்
8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

மஞ்சூர் அருகே தொழிலாளர்களை அச்சுறுத்திய மலைப்பாம்பு பிடிபட்டது

Published On 2022-01-28 16:27 IST   |   Update On 2022-01-28 16:27:00 IST
மஞ்சூர் அருகே மலைப்பாம்பு ஒன்று தொழிலாளர்களை அச்சுறுத்தியது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை உள்ளது. இப்பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை மற்றும் அதன் அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடி யிருப்புகள் அமைந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் நடமாடி வந்தது. அடிக்கடி தேயிலை தோட்டங்களில் செடிகளுக்கிடையே மலைப் பாம்பு ஊர்ந்து செல்வதை கண்டு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். 

மேலும் கோழிகளை பிடிப்பதற்காக குடியிருப்பு பகுதிகளிலும் பாம்பு நடமாடியதால் அச்சம் அடைந்த பொதுமக்கள் மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த காட்டிற்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பசுந்தேயிலை கொள்முதல் மையம் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு இருப்பது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் வனவர் ரவிக்குமார் தலை மையில் வனக்காப்பாளர் அர்ஜூன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். தொடர்ந்து தேயிலை தோட்டத்தில் செடிகளுக்கு அடியில் பதுங்கியிருந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். 

தொடர்ந்து  பாம்பை  எடுத்து சென்ற வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் விடுவித்தனர். 10 நாட்களுக்கும் மேலாக அச் சுறுத்தலை ஏற்படுத்திய மலைப்பாம்பு பிடிபட்டதால் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
 

Similar News