செய்திகள்
மருத்துவ முகாம்

200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2021-11-12 05:47 GMT   |   Update On 2021-11-12 07:15 GMT
மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அருகில் உள்ள இலவச மருத்துவ முகாமுக்கு சென்று மருந்து மாத்திரைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாத மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தேங்கிக் கிடக்கும் மழைநீரில் பாம்பு, பல்லி, தவளை, தேள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இறந்த நிலையில் மிதக்கின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேங்கிய தண்ணீரில் கொசு அதிகம் உற்பத்தி யாகும் என்பதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 200 வார்டுகளிலும் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டு இருந்த இலவச மருத்துவ முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கான பரிசோதனைகளையும் பார்வையிட்டார்.

அதன்பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேலை உள்ளிட்ட மருந்து மாத்திரைகளையும் வழங்கினார். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால இலவச மருத்துவ முகாம்கள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப்சிங் பேடி விளக்கி கூறினார். மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அருகில் உள்ள இலவச மருத்துவ முகாமுக்கு சென்று மருந்து மாத்திரைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மயிலை வேலு எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Tags:    

Similar News