செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்- போலீசாரிடையே வாக்குவாதம்: 80 பேர் கைது
கடலூரில் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அண்ணாபாலம் அருகில் உள்ள பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று மாலை அணிவிக்க முடிவு செய்தனர். இதற்காக நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் திருமேனி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பெரியார் சிலை அருகில் ஒன்று திரண்டனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதை அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, ஊர்வலமாக செல்ல தடை விதித்தனர்.
இதையடுத்து கட்சி நிர்வாகிகள், மஞ்சக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் ஊர்வலமாக செல்லக்கூடாது என்று போலீசார் கண்டிப்புடன் தெரிவித்தனர். இருப்பினும் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக செல்ல முற்பட்டனர்.
இதனால் போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், நகர செயலாளர்கள் செந்தில், ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகளை விடுதலை செய்யக்கோரி திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.