செய்திகள்
விக்கிரமராஜா

ஜி.எஸ்.டி. கட்டுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது- விக்கிரமராஜா

Published On 2020-01-03 11:46 GMT   |   Update On 2020-01-03 11:46 GMT
ஜி.எஸ்.டி. வரி கட்டுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் இதில் வரக்கூடிய மாற்றங்களைப் பார்க்கும்போது நாம் ஏன் வரி கட்ட வேண்டும் என்ற நினைப்பு வருவதாகவும் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
வேலூர்:

வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேலூரில் நடந்தது. இதில் அமைச்சர் கே.சி.வீரமணி வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் வேலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து விக்கிரமராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் அடிக்கடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது ஜி.எஸ்.டி. வரி சட்ட விதிகளை எளிமைப்படுத்த வேண்டும். சாதாரண வியாபாரிகளும் இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி கட்டுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதில் வரக்கூடிய மாற்றங்களைப் பார்க்கும்போது நாம் ஏன் வரி கட்ட வேண்டும் என்ற நினைப்பு வருகிறது.

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகளுக்கு தெரியும். நாடு முழுவதும் ஒரே தடைச்சட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே பிளாஸ்டிக் குட்கா போன்றவற்றை ஒழிக்க முடியும்.

சீன பொருட்களில் நச்சுத்தன்மை உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனை தடை செய்வது குறித்து அரசுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழுத்தம் கொடுக்கும். வியாபாரிகள் பொருட்களை வாங்கி விற்பனை செய்கிறோம்.

இதனால் எங்களால் தரமற்ற பொருட்களை தடுக்க முடியாது. பொருட்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் தரத்தை ஆய்வு செய்தால்தான் பொருட்களின் தரத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும். கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என வியாபாரிகளை அதிகாரிகள் மிரட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேல், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ஆம்பூர் கிருஷ்ணன், வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அருண் பிரசாத் ஏ.வி.எம். குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News