செய்திகள்
ராஜேந்திரன்

சென்னை வாலிபரை ரெயிலில் இருந்து தள்ளி கொல்ல முயற்சி - மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது

Published On 2020-01-01 12:18 GMT   |   Update On 2020-01-01 12:18 GMT
அரக்கோணம் அருகே சென்னை வாலிபரை ரெயிலில் இருந்து தள்ளி கொல்ல முயற்சி செய்த அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்:

சென்னை ஆவடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 30). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி அஸ்வினி (26). தம்பதிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அஸ்வினியின் தாய் வீடு பெரம்பூர் செம்பியத்தில் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த அனுரகுவம்சி (22) என்பவருக்கும் அஸ்வினிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்தனர். இதனை அறிந்த ராஜேந்திரன் மனைவியை கண்டித்தார். இதனால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. அஸ்வினி கள்ளகாதலை கைவிடாததால் இருவரும் பிரிந்தனர்.

இதனையடுத்து செம்பியத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனாலும் கணவன் மனைவியிடையே தகராறு தொடர்ந்தது.

இது தொடர்பாக செம்பியம் போலீஸ் மற்றும் ஆவடி மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கணவனை தீர்த்து கட்ட அஸ்வினி முடிவு செய்தார். இது பற்றி அனுரகுவம்சியிடம் கூறினார். இதற்கு அஸ்வினியின் தம்பி கமலேஸ்வரன் (21) உதவுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அஸ்வினி அனுரகுவம்சி அவரது நண்பர் தினேஷ் மற்றும் கமலேஸ்வரன் ஆகியேர் கடந்த 30-ந்தேதி ராஜேந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டனர். அவரை ரகசியமாக பின் தொடர்ந்தனர். 30-ந்தேதி ராஜேந்திரன் ஆவடியில் இருந்து திருத்தணி செல்வதற்காக மின்சார ரெயிலில் ஏறினார். அவரை பின் தொடர்ந்து 3 பேரும் ஏறினர்.

அஸ்வினி அதே ரெயிலில் மற்றொரு பெட்டியில் ஏறினார். அரக்கோணத்தில் ரெயில் பயணிகள் அதிகளவில் இறங்கியதால் பெட்டி காலியானது.

அப்போது 3 பேரும் முகத்தை துணியால் மறைத்து கட்டிகொண்டு ராஜேந்திரனை தாக்கினர். அவரை இழுத்து ரெயிலில் இருந்து தள்ளி விட்டனர். அந்த நேரத்தில் ரெயில் கைனூர் ரெயில்வே கேட் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதனால் லேசான காயமடைந்த ராஜேந்திரன் மயங்கினார்.

சிறிது நேரம் கழித்து கண்விழித்த அவர் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

அதில் அவரது மனைவி குடும்ப தகராறில் கூலிபடையை ஏவி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறினார். போலீசார் செம்பியம் சென்று அஸ்வினியிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் ராஜேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அஸ்வினி அனுரகுவம்சி, கமலேஸ்வரன், தினேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அஸ்வினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் மற்ற 3 பேரும் ஆண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News