செய்திகள்
புதூர் பகுதியில் பெய்த மழையால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றதை படத்தில் காணலாம்

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை - மின்னல் தாக்கி 2 மாடுகள் பலி

Published On 2019-04-23 11:03 GMT   |   Update On 2019-04-23 11:03 GMT
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 2 மாடுகள் உயிரிழந்தது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தியது. வெயிலுடன் அனல் காற்றும் வீசியது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. நள்ளிரவு 12 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதே போல் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பியில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த காற்று, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது.

இந்த மழை 4.45 மணி வரை நீடித்தது. அதன் பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் வாகன ஓட்டிகள் அவர்களது வாகனங்களை முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் கனமழையாக பெய்தது. இந்த மழை 5.30 மணி வரை நீடித்தது. இந்த நிலையில் மேல்மலையனூர் அருகே உள்ள கீழ்செவளாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 56) என்பவர் தனக்கு சொந்தமான பசு மாட்டை அந்த பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அந்த மாடு செத்தது.

இதேபோல் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவர் தனது வயலில் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் ஒரு பசு மாடு செத்தது. மேலும் ஒரு மாடு காயமடைந்தது.

சங்கராபுரம்,கச்சிராயப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மாலை 5 மணி முதல் இரவு 10 வரை மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5.15 மணி முதல் 6 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதேபோல் திருநாவலூர், மயிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்திலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை லேசாக குளிர்ந்த காற்றுவீசியது. அதன் பின்னர் சிறிது நேரம் மழை தூறி கொண்டு இருந்தது.

பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆவினங்குடி, பட்டூர், கோழியூர் ஆகிய பகுதிகளில் இரவு 9 மணி அளவில் பலத்த சூறை காற்று வீசியது. இதில் பட்டூர்- கோழியூர் சாலை பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் யாரும் அதிர்ஷ்டவசமாக வராததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சாலையின் குறுக்கே மரக்கிளை விழுந்ததால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கபட்டது.

இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே கிடந்த மரக்கிளையை எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. அதன்பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணிநேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.

இதேபோல் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு லேசாக மழை தூறியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
Tags:    

Similar News