செய்திகள்

ஊட்டி தனியார் பள்ளி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-03-15 16:17 GMT   |   Update On 2019-03-15 16:17 GMT
ஊட்டி தனியார் பள்ளி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி மராட்டியம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும் உள்ளனர்.

சர்வதேச அளவில் இயங்குவதால் பள்ளியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி பள்ளியில் தங்கியிருந்து படிக்கும் தங்களது குழந்தைகளை மாதத்தில் ஒருமுறை மட்டுமே பெற்றோர் பார்க்க முடியும். இந்த நிலையில் அந்த பள்ளியில் புனேவை சேர்ந்த ஆனந்த் என்பவரது மகள் சாவ்லி சர்மிளா(வயது 16) தங்கியிருந்து, பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு விடுதியில் உள்ள தனது அறையில் இருந்து உணவு சாப்பிட சாவ்லி சர்மிளா வெளியே வரவில்லை. இதனால் சக மாணவிகள் அவளது அறைக்கு சென்று பார்த்தனர். ஆனால் அறையிலும் அவள் இல்லை. இதனால் பள்ளி வளாகத்தில் தேடினர். மேலும் பள்ளி நிர்வாக அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே விடுதியில் உள்ள குளியல் அறையில் மாணவி சாவ்லி சர்மிளா துப்பட்டா மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் ஊட்டி ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மாணவி சாவ்லி சர்மிளா தனது பெற்றோர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததும், படிப்புக்காக நீண்ட தொலைவில் உள்ள பள்ளியில் சேர்த்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஊட்டி ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News