நாயகன் சௌந்தரராஜா, நாயகி தேவனந்தாவை திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் தங்குவதற்காக மலைப்பகுதிக்கு செல்கிறார். அங்கு நாயகியுடன் சந்தோஷமாக வாழ்ந்து விட்டு, பணம் நகைகளை இந்த வீட்டில் மறைத்து வைத்துவிட்டு சில தினங்களில் வருவதாக சொல்லி நாயகி தனியே விட்டு செல்கிறார்.
இரண்டு மூன்று வருடங்கள் ஆகியும் சௌந்தரராஜா வராமல் இருக்கிறார். இந்நிலையில் பாம்பு கடித்ததாக கூறி வீட்டுக்கு வரும் சந்தோஷ் தாமோதரன், நாயகி தேவனந்தாவை அடைய நினைக்கிறார். மேலும் சௌந்தரராஜா வீட்டில் மறைத்து வைத்திருக்கும் பணம் மற்றும் நகைகளை தேடுகிறார்.
இறுதியில் சந்தோஷ் தாமோதரன் யார்? எதற்காக பணம் நகைகளை தேடுகிறார்? நாயகி தேவனந்தாவை அடைந்தாரா? சௌந்தரராஜா தேவானந்தாவை தேடி மீண்டும் வந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சௌந்தரராஜா, காதல், கோபம், சண்டை என நடிப்பில் பளிச்சிடுகிறார். இவருக்கு படம் ஆரம்பம் மற்றும் இறுதி காட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் தேவனந்தா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துணிச்சலான கதாபாத்திரத்தை தைரியமாக செய்ததற்கு பாராட்டுக்கள். குறிப்பாக கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
சந்தோஷ் தாமோதரன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி தேவனந்தாவை அடைய நினைப்பது, அவருக்காக ஏங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். அப்புகுட்டி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
இயக்கம்
மலைப்பகுதியில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் அனில் குமார். ஒரு பெண்ணை அடைய நினைப்பவர்கள், அவர்களை அந்த பெண் எப்படி சமாளிக்கிறார் என்பதை திரை கதையாக கொடுத்திருக்கிறார். மெதுவாக செல்லும் திரை கதையும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாததும் படத்திற்கு பலவீனம்.
இசை
வர்கீஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மலைப்பகுதிகளை அழகாக படம் வீட்டில் ரசிக்க வைத்திருக்கிறார்.
ரேட்டிங்- 2/5