'வாய்ப்பு கொடுத்தாலும் 2026 தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்' - நடிகர் சரத்குமார்!
- மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை
- எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் விஜய் பயணிக்கிறார்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லைக்கு சென்ற பா.ஜனதாவின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாருக்கு அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார்,
"100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை மாற்றினார்கள் என்றால் பொதுவான பெயரை வைத்துள்ளார்கள். காந்தி பெயரை தூக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. ஏதாவது ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இதனை எதிர் கட்சியினர் சொல்கிறார்கள். வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ள பலன்கள் என்ன என்பதை அறிந்து பேச வேண்டும். 100 நாட்களை 125 நாட்களாக உயர்த்தி உள்ளனர். மாநில அரசு இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என சொல்வதால் தான் இந்த திட்டம் அவர்களுக்கு இடிக்கிறது.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் 90 சதவீதம் திட்டங்கள் மத்திய அரசின் திட்டமே செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி விட்டு தி.மு.க தனது பெயரை வைத்துக் கொள்கி றது. மதச்சார்பின்மை குறித்து தி.மு.க. பேசுவது வேடிக்கையாக உள்ளது.
தீபாவளி கொண்டாட மாட்டார்கள். வேறு எந்த விழாவும் கொண்டாட மாட்டார்கள். ஆனால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி கொள்கிறார்கள். இந்துக்களை புறக்கணிப்பது தி.மு.க. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். தீப தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது. தீபத்தூண் விவகாரத்தில் அரசு மாற்றி மாற்றி பேசி வருகிறது.
தேவையற்ற விஷயங்களை புகுத்துவது தவறான ஒன்று. பிறர் நம்பிக்கையை கெடுக்கும் விதமாக பேசக்கூடாது. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்களோடு இருக்க வேண்டும். பிறரது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செய்யக் கூடாது. தேர்தல் வரும்போது மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். அதன் பின்னர் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தெரியும்.
தமிழக வெற்றிக் கழகம் என்று முழுசாக சொன்னால் எனக்கு தெரியவில்லை. த.வெ.க., இ.வெ.க., மு.வெ.க. என சொன்னால்தான் தெரிகிறது. அரசியல் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் பணி தொடங்குவது அவர்களது வேலை. அதனை அவர்கள் தொடங்கியுள்ளார்கள். விஜய்க்கு யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்று தெரியவில்லை. அவர் அரசியல் பேசுகிறார். எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் அவர் பயணித்து வருகிறார்.
விஜயை பிரம்மாண்டமாக காட்டி அவரது கட்சி பெரிய கட்சியாக மக்கள் மத்தியில் காட்டப்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தான் பெரிய கட்சி. 2026-ம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்களை போட்டியிட்டு வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன்.
ஜனவரி மாதம் கூட்டணி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் முழுவதுமாக இறங்கி தேர்தல் பணியாற்ற தயாராகி வருகிறேன். நான் சட்டமன்றத் தேர்தலில் எங்கும் போட்டியிடவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பிறருக்காக பிரசாரம் செய்து ஆட்சி மாற்றத்திற்காக பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.