செய்திகள்

காட்டுமிராண்டி செயல்களுக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது - ரஜினிகாந்த் அறிக்கை

Published On 2019-02-16 03:00 GMT   |   Update On 2019-02-16 03:00 GMT
ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #PulwamaAttack #Rajinikanth
சென்னை:

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினரின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் குவிந்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். போதும்... நடந்தவரை போதும்... இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. பலியான வீரர்களின் குடும்பத்தினருக்காக என் இதயம் கலங்குகிறது. உலகை விட்டுப்பிரிந்த தைரியமான அந்த இதயங்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய தலைவர் எம்.கே.பைஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  #PulwamaAttack #Rajinikanth
Tags:    

Similar News