செய்திகள்

பா.ஜனதாவுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டது- கனிமொழி குற்றச்சாட்டு

Published On 2019-01-10 10:23 GMT   |   Update On 2019-01-10 10:23 GMT
பாராளுமன்றத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்பட்டது என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார். #DMK #Kanimozhi #ADMK #BJP
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி., டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இடம் ஒதுக்கீடு செய்து மத்திய பா.ஜனதா அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மக்களை ஏமாற்றுவதற்காக இதை செய்துள்ளனர்.

இந்த இடஒதுக்கீட்டை தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இதுபற்றிய கருத்தை பதிவு செய்துள்ளார். பாராளுமன்றத்திலும் தி.மு.க. இதை எதிர்த்து ஓட்டு போட்டுள்ளது.

அ.தி.மு.க.வும் இந்த சட்டத்தை எதிர்ப்பது போல பேசினார்கள். ஆனால் அது வெறும் நடிப்பு. அ.தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டுப் போடவில்லை. பா.ஜனதா ஆணைப்படி அவர்கள் வெளிநடப்பு செய்து விட்டனர்.

இதன்மூலம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இந்த சட்ட மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆண்டு வருமானம் 8 லட்சம் இருக்கலாம் என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். நாட்டில் மற்ற பிரிவில் 97 சதவீதம் பேர் குறைந்த வருமானம் உள்ளவர்கள்தான். அவர்களுக்கு என்ன நியாயம்?

மத்திய பா.ஜனதா அரசு இந்துத்துவா, இந்துஸ்தான் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. பள்ளிகளில் இந்தியை திணிக்க முயற்சி செய்து வருகிறது. இந்தியை எதிர்க்கும் திராவிட இயக்கத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள்.


டி.டி.வி.தினகரன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்ததாக கூறினார்கள். அவரை விமர்சனம் செய்ய தினகரனுக்கு எந்தவித தகுதியும் இல்லை.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

டி.கே.ரங்கராஜன் கூறியதாவது:-

கனிமொழிக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனக்கும் அவருக்கும் எந்தவித மோதலோ, கருத்து வேறுபாடோ இல்லை.

10 சதவீத இடஒதுக்கீடு பிரச்சனையில், அகில இந்திய கட்சி என்ற அளவில் சில மாநிலங்களை கருத்தில் கொண்டு ஆதரவாக ஓட்டு போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் சட்ட மசோதாவை ஆதரித்து பேசவில்லை. குறைகளை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi #ADMK #BJP
Tags:    

Similar News