செய்திகள்

பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2019-01-10 05:06 GMT   |   Update On 2019-01-10 05:41 GMT
தமிழக அரசு மேல்முறையீடு மூலமாக சாதகமான தீர்ப்பை பெற்று, நிச்சயமாக அனைவருக்கும் பொங்கல் பரிசு தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #PongalGift
கோவில்பட்டி:

கழுகுமலை, வானரமுட்டி அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். இதில் கழுகுமலை பள்ளியில் 255 பேருக்கும், வானரமுட்டி பள்ளியில் 115 பேருக்கும் சைக்கிள் வழங்கப்பட்டன.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் முதன் முதலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.100 வழங்கினார். அதுபோல் தற்போது முதல்வர் அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து, காலத்துக்கு தகுந்தாற்போல் பொங்கல் பரிசுடன் ரூ. 1000 வழங்கி நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

தமிழக அரசு மேல்முறையீடு மூலமாக சாதகமான தீர்ப்பை பெற்று, நிச்சயமாக அனைவருக்கும் பொங்கல் பரிசு தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 16.10.1996-ல் தி.மு.க. ஆட்சியில் தான் முதன் முதலில் உத்தரவு வழங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய சிப்காட் வளாகத்தில் 245 ஏக்கர் ஒதுக்க கையெழுத்திட்டது அன்றைக்கு தொழில் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தான். அப்போதே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஜெயலலிதா. தற்போது உச்சநீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவு செயல்படுத்த தடையில்லை என தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பின் சாராம்சம் வந்த உடன், சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்து அதன் மூலமாக ஆலையை நிறுத்துவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என சட்டமன்றத்தில் முதல்வர் கூறியுள்ளார். அந்த நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார். #PongalGift #MinisterKadamburRaju
Tags:    

Similar News