ஈரோடு:
ஈரோடு முத்தம் பாளையம் அடுத்த நல்லிபாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் பிரபு. கார் டிரைவர். இவரது மனைவி இந்துமதி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் பிரபு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
வீட்டு கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கவில்லை.மேலும் வீட்டில் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது.
இதனால் பதட்டமடைந்த பிரபு வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே பார்த்ததார். அப்போது இந்துமதி தூக்கில் தொங்கிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பிரபு அலறினார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இந்துமதியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்துமதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்துமதி என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.