செய்திகள்

சென்னை ஐஐடி உணவு விடுதியில் பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல்- பொன். ராதாகிருஷ்ணன்

Published On 2018-12-15 08:40 GMT   |   Update On 2018-12-15 08:40 GMT
சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல் என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #ChennaiIIT
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

5 மாநில தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வுக்கு ஏற்பவே பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் மத்திய அரசுக்கு எதுவும் இல்லை.

தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு எந்த கட்சியுடனும் பிரச்சனை இல்லை. இங்கு, இறப்பை முன்வைத்து அரசியல் செய்வது போன்ற மோசமான நடவடிக்கை எதுவும் இல்லை.

தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. மூழ்கும் கப்பல் என்று கூறியுள்ளார். அந்த கப்பலில் தான் அவர் இதுவரை துணை கேப்டனாக இருந்தார்.


இலங்கையில் ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் அங்குள்ள தமிழர்களுக்கும், இங்குள்ள தமிழர்களுக்கும் சுமூக உறவு ஏற்பட்டால் நல்லதுதான்.

குமரிமாவட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலம் ரூ. 2 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கூறியிருக்கிறார். ஒரு திட்டத்தின் மொத்த மதிப்பீடு என்ன என்பதை கூட தெரியாமல் கூறியிருப்பதை இப்போது தான் பார்க்கிறேன்.

குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை திட்டத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. இது பற்றி பேசுபவர்கள் எந்த திட்டத்தில் எவ்வளவு ஊழல் என்பதை தெளிவாக கூற வேண்டும். இது பற்றி நான் அவருக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளேன்.

குமரி மாவட்டத்தில் ஒரு திட்டங்கள் கூட நடைபெறாத போது வராதவர்கள் இப்போது வந்துள்ளார்கள். இங்கு மதம், ஜாதி பிரச்சனையை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #ChennaiIIT
Tags:    

Similar News