செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி முதியவர் பலி- குழந்தை படுகாயம்

Published On 2018-12-13 11:39 GMT   |   Update On 2018-12-13 11:39 GMT
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

திருவொற்றியூர்:

சென்னை எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது60). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மகள் லட்சுமிக்கு திருமணமாகி நேகாஸ்ரீ (2½) என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை விம்கோ நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்தது.

இன்று காலை குழந்தையை பள்ளியில் விடுவதற்காக கிருஷ்ணமூர்த்தி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். எண்ணூர் விரைவு சாலை சக்திநகர் பகுதியில் சென்றபோது எதிரே திருவொற்றியூரில் இருந்து மாதவரம் நோக்கி கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது.

திடீரென்று லாரி தறிகெட்டு ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு மறுபுறம் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் கிருஷ்ண மூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த குழந்தை நேகா ஸ்ரீயை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். டிரைவரை பிடித்து வைத்துக் கொண்டு அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்தனர். பின்னர் டிரைவரை பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்தனர். அவரது பெயர் காளிதாஸ் (40), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர். அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News