செய்திகள்
விருப்ப ஓய்வு பெற்ற பெண் காவலர் செல்வராணியை திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்தபோது சால்வை அணிவித்து வரவேற்றார்

அண்ணனாக இருந்து உதவி செய்வேன்- விருப்ப ஓய்வு பெற்ற பெண் போலீசுக்கு முக ஸ்டாலின் ஆறுதல்

Published On 2018-12-05 04:39 GMT   |   Update On 2018-12-05 04:39 GMT
கருணாநிதிக்கு இரங்கற்பா கவிதை வாசித்த விவகாரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற பெண் போலீஸ் வீட்டுக்கு சென்று மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். #MKStalin #Selvarani
திருச்சி:

திருச்சி மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் தலைமைக்காவலராக பணியாற்றியவர் செல்வராணி. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த போது இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டிருந்தார்.

அவரது கவிதை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து செல்வராணி திருச்சி மாநகர காவல் துறையில் இருந்து மத்திய மண்டல காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பணியிட மாற்றத்தை ஏற்க மறுத்த செல்வராணி, விருப்ப ஓய்வில் செல்வதாக காவல் துறைக்கு கடிதம் அளித்தார். அதன்பின் 3 மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தார். இந்நிலையில் விருப்ப ஓய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான கடிதம் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இருந்து செல்வராணிக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்துஅவர் பதவியில் இருந்து விலகினார்.

இதுகுறித்து செல்வராணி கூறும் போது, கருணாநிதிக்கு இரங்கல் கவிதை பாடியதற்கு விளக்கம் கேட்டு எனக்கு மெமோ அளித்தனர். அதற்கு பதில் அளிப்பதற்குள் திடீரென என்னை பணியிட மாற்றம் செய்தனர். விளக்கம் தருவதற்குள் எப்படி பணியிட மாற்றம் செய்யலாம் என அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் சரியான பதில் சொல்லவில்லை.


என் பேச்சுரிமை பறிக்கப்பட்டதாக உணர்ந்தேன். பணியில் சேர்ந்தால் மீண்டும், மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு பழி வாங்கப்படலாம் என்பதால் குடும்பத்தின் நலன் கருதி பணியிலிருந்து விலகி விட்டேன். இதற்கு முன்னர் ஜெயலலிதா மறைந்த போது நான் கவிதை வாசித்தற்கு ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் நேற்று திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், செல்வராணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்த தகவல் அறிந்து கே.கே.நகர் ரெங்கநகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அப்போது செல்வராணிக்கு வழங்கப்பட்ட மெமோ கடிதத்தை வாங்கி படித்த ஸ்டாலின், இரங்கல் தெரிவித்ததற்காக மெமோ கொடுத்துள்ளனரா? எவ்வளவு ஆண்டு இன்னும் சர்வீஸ் உள்ளது? இனி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்க, இன்னும் 15 ஆண்டுகள் சர்வீஸ் இருந்தது. இனி தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ள கலைப் பணியை தொடர்வேன். அவரது கவிதைகளை பிரபலமாக்குவேன் என்றார்.

நீங்கள் கவிதை படித்ததை பார்த்தேன். தலைவர் கருணாநிதியை வார்த்தைக்கு வார்த்தை அப்பா என அழைத்து கவிதை படித்துள்ளீர்கள். நான் உங்களுக்கு அண்ணனாக இருந்து இறுதி வரை செய்ய வேண்டிய உதவிகளை செய்வேன். கவலை வேண்டாம் என உருக்கமாக தெரிவித்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செல்வராணியின் கணவர் ராமச்சந்திரன், மகன் பரமாத்மிகன், மகள் பரமாத்மிகா மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர். #MKStalin #Selvarani
Tags:    

Similar News