செய்திகள்
புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர்-திருநாவுக்கரசர் சந்தித்து கைகுலுக்கி கொண்டனர்.

புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர்- திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு

Published On 2018-11-29 04:12 GMT   |   Update On 2018-11-29 04:12 GMT
புதுக்கோட்டையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரை சந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thirunavukkarasar #MinisterVijayabaskar
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் புத்தகங்கள் கஜா புயலால் நனைந்து வீணாகியது. இதனால் அவற்றிற்கு மாற்றாக மாணவர்களுக்கு புதிய புத்தகப்பை, சீருடை, புத்தகங்களை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.

இதனை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு பைக்கில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு விருந்தினர் மாளிகைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி துரை. திவ்யநாதனின்வீட்டின் முன்னர் ஏராளமான கார்கள் அணிவகுத்து நின்றன. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் காரும் அங்கு நின்று கொண்டிருந்தது.

மேலும் அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினரிடம் திருநாவுக்கரசர் வந்துள்ளாரா? என கேட்டு தெரிந்து கொண்டார்.


திருநாவுக்கரசர் வந்திருப்பதை உறுதி செய்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் கட்சியினர் எதிர்பாராத வகையில் திவ்யநாதனின் வீட்டிற்குள் சென்றார். இதனை பார்த்த கட்சியினர் நடப்பது என்ன என தெரியாமல் திகைத்தனர்.

பின்னர் அங்கு கட்சியினருடன் அமர்ந்திருந்த திருநாவுக்கரசரை, அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 5 நிமிடங்கள் வரை தொடர்ந்தது. அதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்படுவதாக கூறி சென்றார். அப்போது திருநாவுக்கரசர் வாசல் வரை வந்து இன்முகத்தோடு அவரை வழியனுப்பினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான விஜயபாஸ்கரும் கஜா புயல் பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரை சந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thirunavukkarasar #MinisterVijayabaskar
Tags:    

Similar News