செய்திகள்

புயலை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்- தமிழிசை குற்றச்சாட்டு

Published On 2018-11-24 01:59 IST   |   Update On 2018-11-24 01:59:00 IST
புயலை வைத்து அரசியல் செய்ய மு.க.ஸ்டாலின் முடிவு செய்து உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார். #tamilisai #mkstalin #gajacyclone
ஆலந்தூர்:

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்டா பகுதிகளில் 4 நாட்கள் மக்களுடன் தங்கி இருந்து மருத்துவ சேவை செய்ய உள்ளேன். இதற்காக ரூ.15 லட்சம் மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய, மாநில அரசுகள் மருத்துவ முகாம்களை நடத்துகின்றன.

இவ்வளவு நிதி தந்தார்களா?, அவர்கள் வந்தார்களா? என்று அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் வகையில் பேசக்கூடாது. மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அளவுக்கு, அனைவரும் அவர்கள் மீது அக்கறையுடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

புயல் பாதித்த பகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் 5 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. தஞ்சாவூர் பள்ளத்தூர் பகுதியில் 30 ஆண்டுகளாக இருந்த பயிராக இருந்தாலும் அடங்கலில் பதிவு செய்யப்படாததால் தென்னை மரத்தை கணக்கெடுக்க முடியாது என்று அதிகாரிகள் கூறிவிட்டதாக மக்கள் தெரிவித்து உள்ளனர். அடங்கலில் பதிவு செய்யாமல் இருந்தது அதிகாரிகளின் குறைதான். இது விவசாயிகளின் குறை கிடையாது. அனைத்து விவசாயிகளுக்கும் என்ன இழப்பீடோ அதை வழங்க வேண்டும்.

பிரதமர் தமிழகத்துக்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்பி உள்ளார். மத்திய குழு பார்வையிட்டு அவர்களின் அனுமானத்தையும், தமிழக அரசின் அனுமானத்தையும் கேட்டு மத்திய அரசுக்கு தெரிவிப்பார்கள். அந்த அடிப்படையில்தான் நிதி வழங்கப்படும். இது நிர்வாக ரீதியாக நடக்கும் வழிமுறைதான். மத்திய அரசு தமிழக மக்களுக்கு முழு ஒத்துழைப்புடன் உள்ளது.

நிவாரண பணிகளில் விமானப்படை, ராணுவ படை எல்லோரும் முழுமையாக ஈடுபட்டு உள்ளனர். முதல்-அமைச்சர் மதிப்பீடு செய்துவிட்டுதான் பிரதமரை சந்தித்து உள்ளார். பிரதமரை காலையில் சந்தித்து உள்ளார்கள். மாலையில் மத்திய குழுவை அனுப்ப அறிவிப்பு வந்து உள்ளது. இதைவிட வேகமாக செய்யவேண்டுமா? என்று தெரியவில்லை.

புயலை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார். அரசியல் செய்யாமல் மக்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #mkstalin #gajacyclone
Tags:    

Similar News