நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம்: பி.சி.சி.ஐ-க்கு எதிரான பொதுநல மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
- பி.சி.சி.ஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம்.
- பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் சில சமயங்களில் வால் நாயை ஆட்டுவிக்கிறது என்பதுதான் இங்கிருக்கும் பிரச்சனை.
"பி.சி.சி.ஐ-ஆல் நடத்தப்படும் கிரிக்கெட் அணியை 'டீம் இந்தியா'என்றோ அல்லது 'இந்திய தேசிய கிரிக்கெட் அணி' என்றோ அழைப்பதற்கு பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதிக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று விமர்சித்த உச்சநீதிமன்றம், தேவையற்ற வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் சுமையைக் கூட்டுவதாகவும் மனுதாரரை கண்டித்தது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் ரீபக் கன்சல் தாக்கல் செய்த பொதுநல மனுவை நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் டெல்லி உயர் நீதிமன்றமே முன்மாதிரியான அபராதம் விதித்திருக்க வேண்டும் என்றும், "உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்காதது நியாயமற்றது. முன்மாதிரியான அபராதம் விதிக்கப்படவில்லை என்றால், இது போன்ற தேவையற்ற மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வருவதை எப்படி நிறுத்துவது?" என்று அந்த அமர்வு கேள்வி எழுப்பியது. மேலும், மனுதாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க நீதிமன்றம் முற்பட்டது. ஆனால் மனுதாரரின் வழக்கறிஞர் விடுத்த தொடர் கோரிக்கைகளை ஏற்று அந்த அபராதத்தைத் தள்ளுபடி செய்தது.
விசாரணையின்போது மனுமீது கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்,
"இது நீதிமன்றத்தின் நேரத்தையும், உங்கள் நேரத்தையும் அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். இது என்ன மாதிரியான வாதம்? அந்த அணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? எல்லா இடங்களுக்கும் சென்று விளையாடும் அந்த அணி, நாட்டைப் பற்றி தவறாகச் சித்தரிக்கிறதா? பி.சி.சி.ஐ-யை விட்டுவிடுங்கள், தூர்தர்ஷனோ அல்லது வேறு ஏதேனும் அதிகார அமைப்போ அதை 'டீம் இந்தியா' என்று காட்டினால், அது இந்திய அணி இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது.
இதனிடையே பி.சி.சி.ஐ-க்கு ஆதரவாக மத்திய அரசு இருப்பதாக தெரிவித்த நீதிபதி பாக்சி, "மத்திய அரசு இங்கே வந்திருந்தால் ஒரு பிரச்சனை இருந்திருக்கும், ஆனால் பி.சி.சி.ஐ-க்கு மிகச்சிறந்த ஆதரவு உள்ளது. இப்போது பரவலான கட்டுப்பாடு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் சில சமயங்களில் வால் நாயை ஆட்டுவிக்கிறது என்பதுதான் இங்கிருக்கும் பிரச்சனை.
பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?
பி.சி.சி.ஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம். அது ஒரு தேசிய விளையாட்டு கூட்டமைப்பாகவோ அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h)-ன் கீழ் ஒரு "பொது அதிகார அமைப்பாகவோ" அங்கீகரிக்கப்படவில்லை. மேலும் இந்திய அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாத நிலையில், பி.சி.சி.ஐ அணியை 'டீம் இந்தியா' அல்லது 'இந்திய தேசிய அணி' என்று குறிப்பிடுவது பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது.
இந்த நடைமுறையானது தவறான சித்தரிப்புக்கு சமமானதாகும். மேலும் இது தேசியப் பெயர், தேசியக் கொடி மற்றும் சின்னங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தும் 'சின்னங்கள் மற்றும் பெயர்கள் (தவறான பயன்பாடு தடுப்பு) சட்டம், 1950' மற்றும் 'இந்தியக் கொடி விதிமுறை, 2002' ஆகியவற்றை மீறும் வாய்ப்புள்ளது. என தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
"இந்த அணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? எல்லா இடங்களுக்கும் சென்று இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அணியை, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா? அது 'டீம் இந்தியா' இல்லையா? அது 'டீம் இந்தியா' இல்லை என்றால், ஏன் இல்லை என்பதை எங்களுக்குத் தயவுசெய்து விளக்குங்கள்," என்று நீதிபதி துஷார் ராவ் கெடேலா கேள்வி எழுப்பினார்.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவும் இந்த வழக்கை அர்த்தமற்றது எனக் குறிப்பிட்டதோடு, "இது நீதிமன்றத்தின் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். ஏதேனும் ஒரு விளையாட்டில் அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசிய அணியைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போன்றவற்றுக்குச் செல்லும் இந்தியக் குழுவினர் அவர்கள் அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? அவர்கள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையா? ஹாக்கி, கால்பந்து, டென்னிஸ் என எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரி அது அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.