இந்தியா

இண்டிகோவின் துணைத்தலைவரை பணிநீக்கம் செய்ய மத்திய அரசு உத்தரவு!

Published On 2026-01-22 19:40 IST   |   Update On 2026-01-22 19:40:00 IST
  • டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை, விமான நிறுவனம் 2,507 விமானங்களை ரத்து செய்தது
  • ரூ.50 கோடியை வங்கி உத்தரவாதமாக டெபாசிட் செய்ய டிஜிசிஏ பரிந்துரை

இண்டிகோவின் துணைத் தலைவரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் விமான நிறுவனத்திற்கு ரூ.20 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்திலும் இதே நிலைமை தொடர்ந்தாலோ அல்லது இதே போன்ற மீறல்கள் மீண்டும் நிகழ்ந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை இயக்க அதிகாரி, விமான நடவடிக்கைகளின் துணைத் தலைவர் மற்றும் ஒரு வள ஆய்வாளர் உள்ளிட்ட மூத்த விமான நிறுவன நிர்வாகிகள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், விமான நிறுவனத்திடம் ரூ.50 கோடியை வங்கி உத்தரவாதமாக டெபாசிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், விமான நிறுவனம் அதன் செயல்பாடுகளில் தேவையான திருத்தங்களைச் செய்தவுடன் அதைத் திரும்பப் பெற கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெருமளவு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, மற்றும் அதன் இழப்பீடு குறித்து தொடரப்பட்ட பொதுநல மனு விசாரணையில் மத்திய அரசு இந்த தகவல்களை  உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஏராளமான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது மற்றும் தாமதங்கள் போன்ற காரணங்களால் நிறுவனத்திற்கு டிஜிசிஏ மொத்தம் ரூ.22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை, விமான நிறுவனம் 2,507 விமானங்களை ரத்து செய்தது மற்றும் 1,852 விமானங்கள் தாமதமாக வந்தன. இதனால் நாடு முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 25ம் தேதி நடைபெற உள்ளது. 

Tags:    

Similar News