செய்திகள்
நீலவேணிக்கு கலெக்டர் புத்தகம் வழங்கி வாழ்த்தியபோது எடுத்த படம்.

வறுமையில் வாடிய மாணவிக்கு உயர்கல்வி படிக்க உதவிய கலெக்டர்

Published On 2018-11-01 05:37 GMT   |   Update On 2018-11-01 05:37 GMT
திருவண்ணாமலையில் வறுமையில் வாடிய மாணவிக்கு உயர்கல்வி படிக்க கலெக்டர் கந்தசாமி உதவி செய்தார். #Tiruvannamalaicollector
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த நீலவேணி என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.

அதில் தான் அரசுப்பள்ளியில் படித்து மேல்நிலை பொதுத்தேர்வில் 976 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். தன்னுடைய அப்பாவும், அம்மாவும் படிக்காதவர்கள் கூலிவேலை செய்துதான் என்னை படிக்க வைத்தனர். நான் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது அப்பா இறந்து விட்டார்.

தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். தான் பி.எஸ்சி நர்சிங் படிக்க வேண்டும் எனவும், தான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் நீங்கள் தான் எனக்கு உதவி புரிய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது, மருத்துவ கல்லூரி இயக்கக தேர்வு குழுவால் நடத்தப்படும் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து அதன் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

அதன்படி கடந்த 6-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் நீலவேணிக்கு திருவண்ணாமலை விக்னேஷ் நர்சிங் கல்லூரியில் படிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தந்தை இறந்து விட்ட நிலையில் இவரது தாயார் விவசாய கூலிவேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நீலவேணி உள்பட 2 பிள்ளைகளை பராமரித்து வருகிறார்.

குடும்ப வறுமை காரணமாக நீலவேணி கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இருந்தார். இதையடுத்து கலெக்டர் கந்தசாமி உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரியை தொடர்பு கொண்டு மாணவியின் குடும்ப நிலையினை கூறி கட்டணமின்றி படிக்க உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், மாணவியின் வறுமை நிலையினை விளக்கி பரிந்துரை கடிதத்தினையும் அளித்தார்.

இந்த நிலையில் மாணவி நீலவேணி 4 ஆண்டுகள் செலுத்த வேண்டிய கட்டணங்களில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்து படிக்க கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது தாயாருடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார். கலெக்டர் நீலவேணிக்கு புத்தகம் அளித்து வாழ்த்து தெரிவித்தார்.  #Tiruvannamalaicollector
Tags:    

Similar News