செய்திகள்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பால் அதிமுகவுக்கு தான் இழப்பு- திவாகரன்

Published On 2018-10-25 07:59 GMT   |   Update On 2018-10-25 07:59 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பால் ஜெயலலிதாவின் உழைப்பால் வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அ.தி.மு.க இழந்துவிட்டது என்று மன்னார்குடியில் திவாகரன் தெரிவித்தார். #18MLAsCaseVerdict #Dhivakaran
மன்னார்குடி:

அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

18 எம்.எல் ஏக்கள் நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பையொட்டியே வந்திருக்கிறது. சபாநாயகருடைய செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிடாது என்பது உண்மை என்றாலும் சபாநாயகருடைய தீர்ப்பு பாரபட்சம் கொண்டதாகும்.

ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தும் அவர்கள் பணியில் தொடர்கிறார்கள். ஆனால் முதல்வரை மாற்ற வேண்டுமென கேட்டதால் 18 எம்.எல்.ஏ.க்களும் நீக்கப்பட்டது பாரபட்சமான தீர்ப்பு என்பது என் கருத்தாகும்.


மேலும் இதை பேசி தீர்வு கண்டிருந்தால் ஜெயலலிதாவின் உழைப்பால் வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அ.தி.மு.க இழந்திருக்காது. இந்த தீர்ப்பால் இழப்பு அ.தி.மு.க.வுக்கு தான். 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு அ.தி.மு.க. அரசுக்கு ஊதப்பட்ட சங்கு.

மீண்டும் தேர்தல் வந்தாலும் இழந்த தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம். அது எதிர்கட்சிகளுக்கே சாதகமாய் அமையும்

சொந்த காரணங்களுக்காக, ஆசைகளுக்காக பொதுச்செயலாளர் சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு தான்தான் எல்லாம் என்ற மாயையை தோற்றுவித்து 18 எம்.எல்.ஏக்களையும் ஏமாற்றி பலிகடாவாக்கியவர் தினகரன் தான்.

தற்போது தினகரன் மேல்முறையீடு செய்வதால் பலன் ஒன்றுமில்லை. ஏற்கனவே 18 தொகுதிகளிலும் மக்கள் பணி நடைபெறவில்லை. மேலும் தாமதப்படுத்துவது நல்லதல்ல. உடனே தேர்தலை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #Dhivakaran
Tags:    

Similar News