செய்திகள்

நிர்மலாதேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்- முத்தரசன் பேட்டி

Published On 2018-10-14 12:54 GMT   |   Update On 2018-10-14 12:54 GMT
6 மாதங்களாக ஜெயிலில் உள்ள நிர்மலாதேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று காட்பாடியில் முத்தரசன் பேசினார். #mutharasan #nirmaladevi

வேலூர்:

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில மாநாடு டிசம்பர் 19-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதுதொடர்பான வரவேற்புக் குழு கூட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் இன்று நடந்தது.

இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-

பாலியல் தொல்லை பற்றி பெண்கள் தற்போது வெளிப்படையாக புகார் கூறிவருவது வரவேற்கத்தக்கது. பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் அதிகாரம் படைத்த ஆணையத்தை அமைக்க வேண்டும்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். கடந்த 3-ந் தேதியில் இருந்து மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய-மாநில அரசுகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணாதது கண்டிக்கத்தக்கது.

பாலாற்றில் புதிய மணல் குவாரி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மணல் குவாரி அமைத்தால் பாலாறு வறண்டு போகும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

எனவே, பாலாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தென்பெண்ணை, பாலாற்றை இணைக்கும் திட்டத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜனநாயக முறையில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த அடக்குமுறையை கண்டித்து வரும் 16-ந் தேதி தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும்.


பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 6 மாதங்களாக ஜெயிலில் உள்ளார். நிர்மலாதேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இவர் சம்பந்தப்பட்ட பாலியல் புகாரில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியும்.


பாலியல் புகாரில் சிக்கியவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும் என்றார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர். #mutharasan #nirmaladevi

Tags:    

Similar News