செய்திகள்

அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மழைக்கு ஏற்றவாறு பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-10-05 08:15 GMT   |   Update On 2018-10-05 08:15 GMT
மழையின் தன்மைக்கேற்ப அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளித்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Sengottaiyan
ஈரோடு:

ஈரோட்டில் இன்று மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் கே வி ராமலிங்கம், கே எஸ் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கேசி கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு 343 பெண் பயனாளிகளுக்கு மானிய விலையிலான ஸ்கூட்டர்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்,


மறைந்த ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக பாலித்தீன் பயன்படுத்தாத ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் கல்வித்துறையை பொறுத்தமட்டில் நவம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய சீருடையை நேற்று முதலமைச்சர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.

வருகின்ற ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் நான்கு வகையான இலவச சீருடைகள் வழங்கப்படும். 11வது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதியில் இலவச சைக்கிள் வழங்கப்படும். 670 பள்ளிகளில் அதிநவீன விஞ்ஞான ஆய்வு கூடமான அடல் லேப் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கணினிமயப்படுத்தவும் ‘யூ டியூப்’ மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறந்த தேசிய தூய்மை பள்ளிகள் தமிழகத்தில் 6 பள்ளிகளும் பாண்டிச்சேரியில் இருந்து பள்ளிகள் மற்றும் குஜராத்தில் ஐந்து புள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்திலுள்ள 54 ஆயிரம் பள்ளிகளும் தூய்மையாக தான் இருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் சிறப்பு ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மழைக்காலத்தில் எவ்வாறு பள்ளிக்கு வந்து செல்வது என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையின் தன்மைக்கேற்ப அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News