செய்திகள்

பொன் மாணிக்கவேலுக்கு, அரசு விருது வழங்க வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-09-28 06:27 GMT   |   Update On 2018-09-28 06:27 GMT
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் பொன் மாணிக்கவேலுக்கு, அரசு விருது வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #BJP #PonRadhakrishnan #PonManickavel
நாகர்கோவில்:

சுசீந்திரத்தை அடுத்த தேரூரில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக நாடுகள் மத்தியில் ஒரு நாட்டிற்கு பெருமை கிடைக்க வேண்டும் என்றால் அந்த நாடு தூய்மையாக இருக்க வேண்டும். இதற்காகவே மத்திய அரசு தூய்மை பாரதம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

காந்தி கண்ட கனவை நனவாக்க பிரதமர் மோடி நேரடியாக தூய்மை பாரத திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எனவே தான் தெருக்களை நேரடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் பொது மக்களும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 6 கோடி கழிவறைகளே அமைக்கப்பட்டிருந்தன. மத்தியில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு 8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் குட்கா போன்ற போதை பொருட்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சனையில் இப்போது சிறுதுளிதான் வெளிவந்துள்ளது. மாநில அரசு இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று கூறிவருகிறார். அவர் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என எண்ணுகிறேன்.

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் அதிகாரி பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரை போன்ற அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு மாநில அரசு முன்வர வேண்டும்.

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தேரூர் பேரூராட்சியில் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து தூய்மை பணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார். #BJP #PonRadhakrishnan #PonManickavel
Tags:    

Similar News