செய்திகள்

7 பேரின் விடுதலை உள்நோக்கத்துடன் தாமதம்- கவர்னர்-மத்திய அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு

Published On 2018-09-23 15:08 GMT   |   Update On 2018-09-23 15:08 GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தப்படுகிறது என்று கவர்னர் மற்றும் மத்திய அரசு மீது முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். #mutharasan

திருச்சி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி நீண்ட காலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தப்படுகிறது. சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மன்னித்து விட்ட நிலையில், மத்திய அரசு உள்நோக்கத்துடன் கவர்னர் மூலமாக தடுத்து வருவதாக கருதுகிறோம். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தாமதமின்றி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசியவர்கள் கூட 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், குற்றத்தை மறுத்துள்ள 7 தமிழர்களை 28 ஆண்டுகளாக சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

தமிழ்நாடு அரசு சுதந்திரமாக செயல் படவில்லை. மத்திய அரசுக்கு அடிமையாக, எடுபிடி அரசாக உள்ளது. வருமான வரி சோதனை என்ற அடிப்படையில் பா.ஜ.க. அரசு, இவர்களை தொடர்ந்து தங்களது அடிமைகளாக வைத்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறோம்.


நீதிமன்றத்தையும் காவல் துறையையும் கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய தமிழக அரசு மறுத்து வருவதில் இருந்தே மத்திய அரசின் அடிமையாக மாநில அரசு செயல்படுகிறது என்பது தெளிவாகிறது என்றார். #mutharasan #tngovernor #centralgovernment #rajivgandhicase #hraja

Tags:    

Similar News