செய்திகள்

ஆதம்பாக்கத்தில் 600 கிலோ செம்புகம்பி திருடிய 6 பேர் கைது

Published On 2018-09-22 07:13 GMT   |   Update On 2018-09-22 07:13 GMT
ஆதம்பாக்கத்தில் 600 கிலோ செம்புகம்பி திருடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

பூந்தமல்லி:

ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் அப்துல். இவர் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கத்தில் பழைய வயர்களில் இருந்து செம்பு கம்பி, அலுமினியம் ஆகியவற்றை பிரித்து எடுக்கும் கம்பெனி வைத்திருக்கிறார்.

இங்கு 5 பேர் வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கம்பெனியில் இருந்த செம்புகம்பி திருட்டு போனது. இதுகுறித்து அப்துல் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார்.

குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்போது, கம்பெனியில் உள்ள சி.சி. டி.வி. கேமரா மூலம் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் செம்புகம்பி திருடியவர்கள் பற்றிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் கேளம்பாக்கத்தில் பழைய இரும்பு கடை வைத்துள்ள ஜான்ராஜ் (27), அசாம் மாநிலத்தை சேர்ந்த பகதூர் சட்டர்ஜி (23), அனில் (22), ஆப்தர் அலி (23), பிஜில் மோரன் (22), தன்போரா (21) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிடிபட்டவர்களிடம் இருந்து 600 கிலோ செம்புகம்பி பறிமுதல் செய்யப்பட்டது. கேளம்பாக்கம் ஜான்ராஜ், அசாம் வாலிபர்களை வாடகை வீட்டில் தங்க வைத்து செம்புகம்பி திருட வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதவிர வட மாநில வாலிபர்கள் எங்கெங்கு திருடினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News