செய்திகள்

தியாகிகள் ஓய்வு ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு - சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Published On 2018-08-15 08:45 GMT   |   Update On 2018-08-15 08:45 GMT
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #IndependenceDayIndia #EdappadiPalaniswami
சென்னை:

சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

அரசால் நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அரசு பெற்றுத் தந்தது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எடுத்த முடிவின் படி ஜுன் மாதம் நமக்கு வர வேண்டிய 9.19 டி.எம்.சி. அடி தண்ணீர் கிடைக்கப் பெற்றது. ஜுலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு 31.24 டி.எம்.சி. அடி தண்ணீர்.


ஆனால் ஜுலை மாதம் இயற்கை அன்னையின் அருளால் தென்மேற்கு பருவ மழை அதிகளவில் பொழிந்ததன் காரணமாக, 1 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் மேட்டூர் அணைக்கு வந்து, 5 ஆண்டுகளுக்குப் பிறகு அணை தனது முழு கொள்ளளவினை இரண்டு முறை எட்டியுள்ளது. ஜுலை மாதம் 19 ஆம் நாளன்று டெல்டா மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக, மேட்டூர் அணை என்னால் திறக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமை புரட்சி ஏற்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, 2011-12 முதல் 2017-18-ம் ஆண்டு வரையிலான காலத்தில் உணவு தானிய உற்பத்தி ஐந்து முறை 100 லட்சம் மெட்ரிக் டன்னை கடந்து சாதனை படைத்துள்ளது.

கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1,652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில நிதியிலேயே செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதனூர் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கதவணை ஒன்று 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்வதற்காக இந்தாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் மானியம் வழங்க ஆணையிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3,780 நபர்கள் இந்த ஆண்டு மட்டும் பயன்பெற்றுள்ளனர்.

சென்னையில் பணிபுரியும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்களுக்காக, வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் மகளிர் விடுதி ஒன்று அரசு நிதியுதவியுடன் கட்டப்பட உள்ளது.

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்துவ பயணிகளின் எண்ணிக்கை இந்தாண்டு முதல் 500லிருந்து 600ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜுலை மாதம் இறுதிவரை 1 கோடியே 96 லட்சத்து 94 ஆயிரத்து 132 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

1.1.2019 முதல் தமிழ்நாட்டில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறுகிய காலத்திலேயே அமல்படுத்தப்பட்டது.

சென்னையின் பல்வேறு முனையங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், மாதவரம் முதல் கோயம்பேடு வரையிலுமான வழித்தடங்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டம்-2ன் கீழ் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 4,880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 27.80 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 1,500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ், 2,276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளும், முதலமைச்சரின் சூரிய ஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 420 கோடி ரூபாய் செலவில் 20,000 வீடுகளும் கட்டப்படும்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அம்மா அறிவித்தார். அந்த அறிவிப்பை நனவாக்கும் வண்ணம், இந்த திட்டம் பிரதமரின் திருக்கரங்களால் அம்மாவின் பிறந்த நாளான 24.2.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் நாளது வரை 16 ஆயிரத்து 903 மகளிருக்கு 36 கோடியே 69 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, பொது அமைதி நிலவ வேண்டும்.

2018-ம் ஆண்டிற்கான அறிக்கையில், ஆளுமையில் இரண்டாவது சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இது மாநில அரசின் நிர்வாகத் திறமைக்கு வழங்கப்பட்ட சான்றாகும்.

நமது மாநிலம் சார்பாக நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றாலோ; அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றாலோ; அல்லது நமது நாட்டின் சார்பாக கலந்து கொண்டால் கூட, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட பதவிகளில், தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள்ஒதுக்கீடாக வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தியாகச் செம்மல்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 13,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, நாட்டிற்காக குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விருதுகளை வழங்கினார். பின்னர் விருதுபெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு பொட்டலங்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் கோட்டையின் வெளிவாயில் வழியாக வந்து அங்கு கூடி இருந்த பொது மக்களையும் சிறப்பு அழைப்பாளர்களை யும் பார்த்து வணங்கியபடி சென்றார்.

நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி, எம்.பி-எம்.எல். ஏ.க்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  #IndependenceDayIndia #EdappadiPalaniswami
Tags:    

Similar News