தமிழ்நாடு செய்திகள்

தர்காவிற்கு வழங்கிய உரிமையை உறுதி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வலியுறுத்தல்

Published On 2025-12-16 15:21 IST   |   Update On 2025-12-16 15:21:00 IST
  • மலை உச்சியில் உள்ள தர்கா மற்றும் தூண் குறித்த படங்களை நீதிபதிகளிடம் வக்கீல் சமர்ப்பித்தார்.
  • மலை உச்சியில் தர்கா இருப்பதால் அதனை சிக்கந்தர் மலை என கூறப்படுகிறது.

மதுரை:

திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை இன்று முற்பகலில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் முன்பு தொடங்கியது. இதில் வக்பு வாரியம் சார்பில் வக்கீல் அப்துல் முபின் வாதாடினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

வக்பு வாரிய வக்கீல்:- மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக தர்கா அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் தொழுகையும் நடந்து வருகிறது. அதுவும் அங்கு ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது.

நீதிபதிகள்:- மலை உச்சியின் இரு இடங்களில் என்னென்ன வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. தர்காவுக்கு சொந்தமான அது சார்ந்த நிலங்கள் என்னென்ன?

வக்பு வாரிய வக்கீல்:- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவும், மலையின் பின்பக்க பகுதியில் காசி விஸ்வநாதர் கோவிலும் உள்ளது. அங்கு ஒருபுறம் பக்தர்களும், இஸ்லாமியர்களும் வந்து செல்ல குதிரைச்சுனை அருகில் இருவேறு பாதைகள் பிரிகிறது. கடந்த காலங்களில் தீபமேற்றுவது தொடர்பாக ஐகோர்ட்டு தனிநீதிபதி உத்தரவுகள் உள்ளன.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றுவது தொடர்ச்சியான பழக்கவழக்கமாக இருந்தது இல்லை. நெல்லித்தோப்பு மற்றும் அதுசார்ந்த பாதைகள், அவ்விடத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது. இதையெல்லாம் தனிநீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை.

தொடர்ந்து மலை உச்சியில் உள்ள தர்கா மற்றும் தூண் குறித்த படங்களை நீதிபதிகளிடம் வக்கீல் சமர்ப்பித்தார். அவற்றை நீதிபதிகள் பார்வையிட்டனர்.

நீதிபதிகள்:- மலை உச்சியில் உள்ள தூணிற்கு செல்லும் பக்தர்கள் தர்காவை கடந்துதான் செல்ல வேண்டுமா? இல்லை வேறு பாதை உள்ளதா?

வக்புவாரிய வக்கீல்:- பழமையான மலை பாதை உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நெல்லித்தோப்பு தர்கா விற்கு செல்லும் படிக் கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என உத்தரவு உள்ளது. மலை உச்சியில் தர்கா இருப்பதால் அதனை சிக்கந்தர் மலை என கூறப்படுகிறது.

1921-ம் ஆண்டில் சிவில் கோர்ட்டு தர்காவிற்கு வழங்கிய உரிமையை உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவை பிரிவியூ கவுன்சிலும் உறுதி செய்துள்ளது என்றார்.

அதற்கு நீதிபதிகள், தர்கா முழுவதும் சர்வே செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து வக்பு வாரியம் சார்பில் சர்வே செய்யப்பட்டு ஆவணங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

பின்னர், தர்காவிற்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளதா? உறுதியான ஆவணங்கள் கொடுக்க இயலுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவை இருந்தால் நாளை தாக்கல் செய்யுங்கள் என்றனர்.

Tags:    

Similar News