தமிழ்நாடு செய்திகள்
null

ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி: மேற்கு மண்டலத்தில் நாளை தொடங்கும் ஆதியோகி ரத யாத்திரை!

Published On 2025-12-16 15:26 IST   |   Update On 2025-12-16 15:39:00 IST
  • பாடல் பெற்ற திருக்கோயில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை நடைபெறுகிறது
  • தென்கைலாய பக்தி பேரவை, ஆதீனங்கள் இணைந்து நடத்த உள்ளன

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழ்நாடு முழுவதும் நடத்த உள்ளன. இந்த ரத யாத்திரை, தேவாரம் பாடல் பெற்ற திருக்கோயில்கள் வழியாகச் செல்ல உள்ளது.

இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் அடியார் வள்ளுவன் பங்கேற்று பேசினார். ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும், இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டு ஆதியோகி ரத யாத்திரையை, தென் கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் நடத்த உள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஆதியோகி ரத யாத்திரை, அந்தந்த பகுதிகளில் உள்ள ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

அந்த வகையில், மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரை, கோவை ஆதியோகி முன்பு வரும் 17-ஆம் தேதி, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைக்க உள்ளனர். ஆதியோகி ரதங்கள், பிரத்யேகமாக 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொள்ள உள்ளன.

இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக, சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன. இந்த ரதங்கள் செல்லும் இடங்களில், அங்குள்ள ஆதீனங்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பை வழங்க உள்ளனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.



இதனுடன், 'சிவ யாத்திரை' எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். இதனுடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களை தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாத யாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்துக்கு வருகை தர உள்ளனர்.

தென் கைலாய பக்தி பேரவை, 'சிவாங்கா' என்றழைக்கப்படும் சிவ பக்தர்களால் இணைந்து உருவாக்கப்பட்டது. இதன் மூலம், திருக்கோவில் உழவாரப் பணிகள், அறுபத்து மூவர் வேள்வி மற்றும் திருவுலா, தேவாரம்–திருவாசக முற்றோதல், ஆதியோகி ரத யாத்திரை மற்றும் சிவ யாத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News