செய்திகள்

ராகுலுக்கு பாதுகாப்பு வழங்காததை சகித்துக்கொள்ள முடியாது- இளங்கோவன் கண்டனம்

Published On 2018-08-11 10:25 GMT   |   Update On 2018-08-11 10:25 GMT
கருணாநிதி உடல் அடக்கத்துக்கு வந்த ராகுலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்காததை சகித்துக்கொள்ள முடியாது என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #KarunanidhiFuneral #RahulGandhi #EVKSElangovan
கோபி:

முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோபியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட அன்று ராகுல்காந்தி சென்னை வந்தார். அவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு தமிழக அரசு சரியான பாதுகாப்பு தரவில்லை. பொதுமக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு ராகுல்காந்தி தள்ளப்பட்டுவிட்டார்.

இந்தியாவிலேயே ராகுல் காந்திக்கு முதல்தர பாதுகாப்பு தர வேண்டியது சட்டமாக உள்ளது. ஆனால் இங்கு எந்தவிதமான பாதுகாப்பையும் இந்த அரசு அளிக்கவில்லை. இது இந்த அரசின் கையாளாகாத தனத்தை காட்டுகிறது.


பிரதமர் மோடிக்கு கொடுத்த பாதுகாப்பை ராகுலுக்கு ஏன் அளிக்கவில்லை? நாங்கள் ராகுலுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பாதுகாப்பு தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

இந்தியாவில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ராகுல் காந்திக்கு ஏன் பாதுகாப்பு தரவில்லை? என எழுதி வருகின்றனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளவருக்கு பாதுகாப்பு குளறுபடியா? இது சகித்துக்கொள்ள முடியாது. இதை உயர்மட்ட விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #KarunanidhiFuneral #Congress #RahulGandhi #EVKSElangovan
Tags:    

Similar News