செய்திகள்

கருணாநிதி மரணம்: விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் நிறுத்தம்

Published On 2018-08-08 06:40 GMT   |   Update On 2018-08-08 06:40 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததையொட்டி விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

விழுப்புரம்:

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப் புரம்-புதுவை சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந் தூர்பேட்டை, திருநாவலூர், மரக்காணம் உள்பட பல இடங்களிலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடை மற்றும் பார்களும் அடைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பணி முடிந்து வீடுகளுக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள், பொதுமக்கள் தவித்தனர். பின்னர் அவர்கள் ஆட்டோ மூலம் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. விழுப்புரம் பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது.

புதுவையில் இருந்து இன்று காலை சென்னைக்கு சென்ற ரெயில் விழுப்புரத்துக்கு காலை 6.15 மணிக்கு வந்தது. அந்த ரெயிலில் சென்னைக்கு தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.

பஸ்கள் ஓடாததால் பல ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

இன்று காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. கடலூர் லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் சாலை, பாரதி சாலை உள்பட பல சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின.

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி முதல் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு திரும்பின.

பஸ்கள் திடீரென்று நிறுத்தப்பட்டதால் கடலூர் பஸ் நிலையத்தில் நேற்று இரவு கூடிய பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஆட்டோக்களை வரவழைத்து அதன் மூலம் அவர்களை பண்ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி உள்பட பல இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்டத்தில் இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல ஊர்களின் பஸ் நிலையங்கள் வெறிச் சோடியது.

Tags:    

Similar News