செய்திகள்

சங்கராபுரம் அருகே சாலையோர பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - 10 மாணவர்கள் படுகாயம்

Published On 2018-07-31 16:16 GMT   |   Update On 2018-07-31 16:16 GMT
சங்கராபுரம் அருகே தறிகெட்டு ஓடிய பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். #SchoolBusAccident
சங்கராபுரம்:

சங்கராபுரத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் சங்கராபுரம், பிரம்மகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்களை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வருவதற்காக வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை பிரம்மகுண்டம் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று சங்கராபுரம் நோக்கி புறப்பட்டது. அந்த வேனை சங்கராபுரத்தை சேர்ந்த நசீர் மகன் காஜா ஷரீப் (வயது 22) என்பவர் ஓட்டினார்.

சங்கராபுரம் அருகே மூக்கனூர் என்ற இடத்தில் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர்.

இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த 12-ம் வகுப்பு மாணவிகள் கீதா, சுப்ரியா, மாணவர்கள் பரகான், நிசார் அலி, முஷரப், 11-ம் வகுப்பு மாணவி பிரிதா(16), மாணவர்கள் சஞ்சய், முஷரப், 10-ம் வகுப்பு மாணவர்கள் ஷாவித், ஜெயக்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் மாணவி பிரிதா மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
Tags:    

Similar News