செய்திகள்

காவேரி மருத்துவமனைக்கு கவர்னர் வருகை - கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்

Published On 2018-07-28 10:21 IST   |   Update On 2018-07-28 10:58:00 IST
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து, அங்கு சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். #KarunanidhiUnwell #KauveryHospital #TNGovernor
சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று நள்ளிரவு மீண்டும் மோசமானதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்தது. மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு கூறியதையடுத்து தி.மு.க.வினர் ஆறுதல் அடைந்தனர். கருணாநிதி பற்றி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என தொண்டர்கள் பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.



இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் இருந்த மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

துரைமுருகன், கனிமொழி, செல்வி, திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு வந்தனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக  மருத்துவமனைக்கு வெளியே ஏராளமான தொண்டர்களும் திரண்டுள்ளனர். #KarunanidhiUnwell #KauveryHospital #TNGovernor
Tags:    

Similar News