என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi Unwell"

    திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #KarunanidhiUnwell #KauveryHospital #Vijayabaskar
    புதுக்கோட்டை:

    தி.மு.க. தலைவருர் மு.கருணாநிதியின் உடல்நிலை மோசமானதையடுத்து மீண்டும் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    கருணாநிதியின் உடல்நலம் பற்றி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும், அவர் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

    மேலும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் உள்ள சில ஷரத்துக்களை நீக்கிவிட்டு அதனை நிறைவேற்ற தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

    இதற்கிடையே, சென்னை காவேரி மருத்துவமைனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், நடிகர் சங்க தலைவர் நாசர், பொன்வண்ணன் உள்ளிட்டோரும் வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். #KarunanidhiUnwell #KauveryHospital #Vijayabaskar
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து, அங்கு சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். #KarunanidhiUnwell #KauveryHospital #TNGovernor
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று நள்ளிரவு மீண்டும் மோசமானதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்தது. மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு கூறியதையடுத்து தி.மு.க.வினர் ஆறுதல் அடைந்தனர். கருணாநிதி பற்றி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என தொண்டர்கள் பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.



    இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் இருந்த மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

    துரைமுருகன், கனிமொழி, செல்வி, திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு வந்தனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக  மருத்துவமனைக்கு வெளியே ஏராளமான தொண்டர்களும் திரண்டுள்ளனர். #KarunanidhiUnwell #KauveryHospital #TNGovernor
    உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக காவேரி மருத்துவமனையின் 4 டாக்டர்கள் கொண்ட குழு வந்துள்ளது. #KarunanidhiHealth #KarunanidhiUnwell
    சென்னை:

    வயது முதிர்வு மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து சென்றார்.  கடந்த 18-ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில் பழைய குழாய் அகற்றப்பட்டு 4-வது முறையாக அவருக்கு புதிய குழாய் பொருத்தப்பட்டது.  

    இந்தநிலையில், கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டது.  கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வந்தனர்.  திமுக தலைவர் கருணாநிதிக்கு வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த 24-ந் தேதி அவருக்கு சளித்தொந்தரவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கும் கடுமையாக சிரமப்பட்டார். இதனால், காவேரி மருத்துவமனையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் கருணாநிதிக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தனர். அதற்காக மருத்துவமனையில் இருந்து சில மருத்துவ உபகரணங்களும் கொண்டுவரப்பட்டன.

    சக்கர நாற்காலியில் கருணாநிதியால் உட்கார முடியவில்லை. இதனால், கட்டிலில் அவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் நேற்று அவரது கை நரம்பு வழியாக சில மருந்துகளை செலுத்தியுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் யாரையும் பகல் நேரத்தில் அவரை பார்க்க டாக்டர்கள் அனுமதிக்கவில்லை.

    ஆனால், மாலையில் ஒவ்வொருவராக சென்று கருணாநிதியை பார்க்க டாக்டர்கள் அனுமதித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கோபாலபுரம் இல்லத்திலேயே இருந்தார்.



    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அமைச்சர்கள் நேற்று இரவு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து அறிந்தார். மதுரையில் இருந்து மு.க.அழகிரி புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார்.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு  இன்று காலை 4 டாக்டர்கள் கொண்ட காவேரி மருத்துவமனை மருத்துவக்குழு  வருகை தந்து உள்ளனர். இந்த குழுவினர், கருணாநிதியின் உடல்நிலையை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப அவருக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர். தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல் வெளியானதால், அவரது கோபாலபுரம் இல்லம் உள்ள பகுதியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். வீட்டைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் என அரசியல் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். #KarunanidhiHealth #KarunanidhiUnwell
    ×