செய்திகள்

தடுப்புச்சுவரில் மோதியதால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி

Published On 2018-07-23 22:58 GMT   |   Update On 2018-07-23 22:59 GMT
பரங்கிமலையில் தடுப்புச்சுவரில் மோதியதால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். #ElectricTrain #Runway #Youth #death
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி விரைவு மின்சார ரெயில் நேற்று இரவு சென்று கொண்டு இருந்தது. சில குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரெயில் நின்று செல்லும் என்பதால் இந்த ரெயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

மேலும் பணி முடிந்து அனைவரும் வீட்டிற்கு செல்லும் நேரம் இயக்கப்படுவதால் பயணிகள் படிக்கட்டில் தொங்கியபடி இந்த ரெயிலில் பயணம் செய்வார்கள். கிண்டி ரெயில் நிலையத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்த இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் ஏறினர். உடனே ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென அங்கிருந்த தடுப்புச்சுவரில் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 2 வாலிபர்கள் மோதினர்.

இதில் தவறி கீழே விழுந்த இருவரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். உயிரிழந்தவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டீபன் (வயது 23), தாம்பரத்தை சேர்ந்த விக்னேஷ் (20) என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கம்பத்தில் பை சிக்கியதால் செங்கல்பட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். அடிக்கடி பரங்கிமலையில் கம்பம், தடுப்புச்சுவரில் மோதி பயணிகள் இறக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. எனவே இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து விபத்தை தவிர்க்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #Tamilnews 
Tags:    

Similar News