செய்திகள்

எம்.பி.க்களே இல்லாத நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதா?- மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை கண்டனம்

Published On 2018-07-20 13:34 IST   |   Update On 2018-07-20 13:34:00 IST
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, மக்களவையில் எம்.பி.க்களே இல்லாத தி.மு.க. ஆதரிப்பதாக கூறியதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக கூறி இருக்கிறார். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் நடந்த போதுதான் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது என்பது தான் உண்மை.

பா.ஜனதா தலைமையிலான இன்றைய மத்திய அரசில் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு தமிழகத்துக்கு வந்துள்ளது. நீட் தேர்வில் பாமர மக்களின் குழந்தைகளும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்து இருக்கிறது.

தி.மு.க.வில் எம்.பி.க்களே இல்லை. ‘ஜீரோ’ எம்.பி.க்களை வைத்துக் கொண்டு மத்திய பா.ஜனதா அரசை எதிர்த்து கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறுகிறார். ஆளும் கட்சியும் ஆதரிக்க வேண்டும் என்கிறார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கையில் லட்சக் கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது தி.மு.க. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததா?

மு.க.ஸ்டாலின் ரஜினியை பா.ஜனதாவின் நட்சத்திர செய்தி தொடர்பாளர் என்கிறார். எம்.பி.க்களே இல்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க சொல்லும் மு.க.ஸ்டாலின் காங்கிரசின் ‘ஜீரோ’ செய்தி தொடர்பாளர்.


8 வழிச்சாலை நாட்டு வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான திட்டம். எனவே, அதை ரஜினி ஆதரித்தார். மத்திய அரசுக்கு எதிரான சில கருத்துக்களையும் கூறியுள்ளார். ரஜினி ஆளும் கட்சியின் ஆதரவாளர் என்று சொல்வது தவறு. ஸ்டாலின் எதிர்த்தால் எல்லோரும் எதிர்க்க வேண்டும் என்பது நாகரீக அரசியல் அல்ல.

‘நீட்’ தேர்வு தமிழ் கேள்விகளில் நடந்த குளறுபடிகளுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் காரணம். நடந்த தவறுக்கு அவர்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சத்துணவு பெண் பணியாளர் நியமனம் தொடர்பாக தமிழகத்தில் தீண்டாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டிலும் இப்படி நடந்திருப்பது வேதனை. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். எஸ்.சி. எஸ்டி. பிரிவினருக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. பா.ஜனதாவுக்கு எதிரான கருத்துக்களை வலிமையான பிரசாரத்தால் முடியடிப்போம்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #DMK
Tags:    

Similar News