தமிழ்நாடு செய்திகள்

3 காவலர்கள் படுகாயம்: சட்டம்-ஒழுங்கை திமுக அரசு பாதுகாக்கும் லட்சணம் இதுதானா?- அன்புமணி

Published On 2026-01-24 20:43 IST   |   Update On 2026-01-24 20:43:00 IST
  • தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
  • காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது துறையில் என்ன நடக்கிறது?

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காவல் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- 3 காவலர்கள் படுகாயம்: சட்டம் - ஒழுங்கை திமுக அரசு பாதுகாக்கும் லட்சணம் இதுதானா?

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, கைதியை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்தின் மீது ஒரு மர்மக் கும்பல் நாட்டு வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் இவ்வளவுக் கொடிய தாக்குதலை நடத்தும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை விசாரணைக்காக அழைத்து செல்லும் போது அவரது எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் ரவுடிகள் வந்து தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், அதைத் தடுக்க முடியாத அளவுக்கு உளவுத்துறையும், நெடுஞ்சாலை சுற்றுக்காவலும் செயலிழந்து விட்டனவா?

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே கொலை, கொள்ளை, குண்டுவீச்சு, காவல்துறை மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்து விட்டன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. காவல்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது துறையில் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாத அளவுக்கு திமுக ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை. செயல்படாத திமுக அரசு இனியும் நீடிக்கக் கூடாது. அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News